-சுகந்தி-
தொலைபேசி என்றாலே புதினமாகப் பார்த்த காலம் போய், இன்று ஆளுக்கு ஒன்று என்று ஒவ்வொரு வீட்டிலும் எல்லோருடைய கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு கைபேசி போதாதென்று, ஒன்றுக்கு மேற்பட்ட சேவை வழங்குநர்களின் இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடிய Dual Sim வசதியுடைய கைபேசிகளும் பாவனைக்கு வந்துவிட்டன.
இந்த வளர்ச்சிப் போக்கின் புதிய பாய்ச்சலாக, இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் மூன்று சிம்களுடன் இயங்கும் நவீன கைபேசிகளை சந்தைக்கு விட்டுள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கக்கூடிய கைபேசியாக Intex In 5030 வெளிவந்துள்ளது.ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில் சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயங்கக்கூடியதாக இதன் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளலாம். ஒருவேளை கைபேசியை எங்காவது தொலைத்துவிட்டீர்களென்றால் அதனைத் தேடிக் கண்டறியும் MobileTracker தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.
எஃப்.எம். றேடியோ, எம்.பி.3 பிளேயர், கமரா என்று, டிஜிடல் தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் உள்ளங்கைக்குள் சுருக்கிக்கொண்டிருக்கும் கைபேசிகள், இன்னுமின்னும் பல சாத்தியங்களையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய கணினியையே தன்னுள் அடக்கியுள்ள Smart Phones உம் இப்போது அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.
இந்தத் தனியார் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கிடையிலான போட்டி காரணமாக, பாவனையாளர்களுக்குக் குஷிதான். அழைப்புக் கட்டணங்கள் வீழ்ச்சியடைந்துவரும் அதேவேளை, GPRS, Broadband,Wifi வசதிகளும் இதனால், மிகக் குறைந்த கட்டணங்களில் பாவனையாளர் கைசேர்கிறது.
Airtel நிறுவனம் மொபைல் தொலைக்காட்சி சேவையையும் விரைவில் வழங்கவிருப்பதாகவும் ஒரு கதை அரசல்புரசலாக இப்போது வெளியாகியிருக்கிறது,
கைபேசிகளின் இந்தப் பரவலால் அது இப்போது மனிதர்களின் ஆறாவது விரலாகிவிட்டது.
வரமா? சாபமா?
இவ்வாறு, நவீன தொழில்நுட்பம் நமக்கு வரமளித்திருக்கும் பல சாத்தியங்களையும் சாபங்களாக்காமல் சரிவரப் பயன்படுத்துவதே நமக்கும், பிறருக்கும் – இந்தத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கும் – செய்யும் கைங்கரியமாகும்.






0 comments:
Post a Comment