Sunday, March 13, 2011

டோக்கியோ : இந்த நூற்றாண்டில் முதன் முறையாக வரலாறு காணாத அதிபயங்கர பூகம்பமும், சுனாமியும் அடுத்தடுத்து படையெடுத்து ஜப்பானை புரட்டி போட்டுவிட்டன; வட கடலோர பகுதிகளை 33 அடி உயர சுனாமி பேரலைகள் சுருட்டிக் கொண்டு போய் விட்டன. கார் முதல் கப்பல்கள் வரை கடல் விழுங்கிவிட்டது. இந்த கோர தாண்டவத்தால், 40 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவிக்கின்றனர். எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.

பூகம்பத்தில் டோக்கியோ உட்பட சில நகரங்கள் அரண்டு போயின. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெரிய அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சுனாமி தாக்கியதில் 60 பேர் பலியாகினர். இந்த பேரழிவில் 1000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. ரஷ்யா, ஹவாய், பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்க நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

எப்போது, எங்கு?: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் நேற்று காலை இந்திய நேரப்படி 11.16 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதை ரிக்டர் அளவு கோலில் 8.9 புள்ளிகளாக பதிவு செய்தது. இந்த நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்டிராத ‘மெகா’ பூகம்பம் என்று தெரிவித்தது.

ஜப்பானின் மக்கள் நெரிசல் மிக்க தீவான ஹான்ஷூ அருகே கடலின் 22 கி.மீ. ஆழத்தில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், டோக்கியோ நகரம் குலுங்கியது.
பூகம்ப நாடான ஜப்பானில் அதை எதிர்பார்த்து சேதம் ஏற்படாத அளவில் கட்டிடங்கள் அமைந் திருந்தாலும் நேற்றைய பூகம்பத்துக்கு அவற்றில் பல இடிந்து விழுந்தன. பெரிய கட்டிடங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன.

தொடர் அதிர்வுகள்: பூகம்பம் நடந்த அரை மணி நேரத்தில் அந்நாட்டின் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது பூகம்பத்தை தொடரும் அதிர்வுகள் ஏற்பட்டன. அதனால், அமைச்சரவை கூடிய அரங்கத்தில் அலங்கார விளக்குகள், மேஜைகள் குலுங்கின. பீதியுடனே முடிந்த கூட்டத்தில், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நடத்த பிரதமர் நவ்டோ கான் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

அணு உலைகள் பாதிப்பா? பயங்கர பூகம்பத்தால் ஜப்பானின் அணு
உலைகள் கசிவதாகவும், பெரும் தீ விபத்து ஏற்படக்கூடும் என்று சில மீடியாக்களில் தகவல் வெளியானது. எனினும், அதை பிரதமர் நவ்டோ மறுத்தார். அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன, அவற்றில் கசிவு இல்லை என்றார் அவர். சுனாமி தாக்குதல்: டோக்கியோ உட்பட வட ஜப்பானின் பல நகரங்களை அடுத்த ஒரு மணி நேரத்தில் பயங்கர வேகத்தில் சுனாமி தாக்கியது. டோக்கியோ,

ஒசாகா நகரங்களுக்குள் 33 அடி உயரம் எழுந்த பேரலைகள் பல கி.மீ. தூரத்துக்கு உள்ளே பாய்ந்தன. இந்த பேரலைகள், வீடுகள், கார்களை கடலுக்குள் இழுத்துச் சென்றன. சில பகுதிகளில் 10 மீட்டர் உயர அலைகள் கரை தாண்டி வந்தன. பயங்கர பூகம்பத்தால் முக்கிய பகுதிகளில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சுனாமியின் தீவிரத்தை பதிவு செய்யும் வீடியோக்கள் உடனடியாக வெளிவரவில்லை.

ஹான்ஷூ தீவில் 12 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் நகருக்குள் நுழைந்து கார்கள், வீடுகள், படகுகளை புரட்டிப் போட்ட வீடியோ வெளியானது. கடலோர நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது கடல் நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அச்சத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு அனைவரும் தப்பி ஓடினர்.
பூகம்பம் ஏற்பட்டபோது, அலுவலகங்கள், வீடுகளில் பொருட்கள் உருண்டு விழுந்தன. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மக்கள் பீதியில் கட்டிடங்கள், வீடுகளைவிட்டு சாலைக்கு ஓடி வந்தனர். சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சத்தில் அப்படியே உறைந்தனர்.

கடல் நீரில் தத்தளித்த நகரம்: பல மீட்டர் உயரத்துக்கு ஊருக்குள் புகுந்த கடல் நீரில் கார்கள், லாரிகள், வீடுகள், வீட்டு சாதனங்கள், இடிபாடுகள் அனைத்தும் பொம்மைகள் போல மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் பழகிப் போன விஷயம் என்ற போதிலும் நேற்றைய பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 60 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும் 1000த்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடக்கிறது.

விமான நிலையம் மூடல்: டோக்கியோ அருகே செண்டாய் நகர விமான நிலையத்தை கடல் நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உயிர் தப்ப பயணிகள் அனைவரும் விமான நிலைய கூரை மீது தஞ்சம் அடைந்தனர். பூகம்பத்தால் உயர்மட்ட பாலங்கள் சேதம் அடைந்திருப்பதால், டோக்கியோ, ஒசாகா நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. சாலைகளில் விரிசல், சுனாமியால் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் காரணமாக வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

பூகம்பம், சுனாமியால் பாதித்த 11,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். டோக்கியோவை சுற்றி மியாகி, ஒடாய்பா, செண்டாய் உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்தது. கடந்த ஒரு வாரத்தில் இதே பகுதியில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய பூகம்பத்துக்கு பிறகு ஏற்பட்ட அதிர்வுகளில் 7.1 புள்ளி அதிகபட்சமாக இருந்தது. இது நியூசிலாந்தில் சமீபத்தில் நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட 6.3 புள்ளி நிலநடுக்கத்தைவிட அதிகம்

0 comments: